புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீரர்கள்,வீராங்கனைகள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு!!

டெல்லி : புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவர்களது சங்கத்தின் தலைவரான பாஜ எம்.பி பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே ஜந்தர் மந்தரில் போடப்பட்டு இருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மல்யுத்த வீரர்கள் நேற்று காலை நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வினேஷ் போகத், சங்கீதா போகத் மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோரை போலீசார் மடக்கினர். அப்போது அவர்களது பிடியில் இருந்து திமிறிக்கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை வலுகட்டாயமாக தரதரவென இழுத்தும் குண்டு கட்டாக தூக்கிச்சென்றும் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒன்றுசேர விடாமல் தடுத்து வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அதன்பின் போராட்டகளத்தில் இருந்த கூடாரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி அங்கு வீரர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த கட்டில், மெத்தை, மின்விசிறி, ஏர்கூலர் அனைத்தையும் அங்கிருந்து அகற்றி போலீசார் அள்ளிச்சென்றனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் உட்பட மல்யுத்த வீரர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வினேஷ் போகத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்கள் ஆனது. ஆனால், அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது 7 மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு சர்வாதிகாரத்தின் பிடியில் உள்ளதா? அரசு தனது வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. புதிய வரலாறு எழுதப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

The post புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீரர்கள்,வீராங்கனைகள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: