ஜனநாயகம் மலருமா?

இ ந்தியாவின் தலைநகரான டெல்லியில்ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அரசியல் சாசன அரங்கம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், 888 உறுப்பினர்கள் அமர்வதற்கான மக்களவை அரங்கம் என புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரமிப்போடு திகழ்கிறது. இதில் தமிழ் மறைகள் முழங்க, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தலைவர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. சர்வமத பிரார்த்தனையோடு, பல மதங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். பிரதமர் மோடியும் ஜனநாயகத்தின் மாண்பை காப்பது குறித்து விளக்கியுள்ளார். உண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு காரணமாக ஜனநாயகம் மிளிரும் நிலையில், மற்றொரு பக்கமும் ஜனநாயகத்திற்கான ஆபத்தும் இந்தியாவை சூழ்ந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை சமூகமும், பழங்குடி மக்களும் தனித்தனி பிரிவுகளாக மோதிக் கொள்கின்றனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில், ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இனக்கலவரத்தை பாஜவே தூண்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி பாஜவின் ஓட்டு வேட்டைக்கான மற்றொரு கோரமுகம் வெளிப்பட தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்திலும் பழங்குடியினருக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் இடையே இனக்கலவரத்தை தூண்டிவிட முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரமிக்கும் வகையில் கட்டி முடித்துவிட்டு, மற்றொரு பக்கம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளும் பாஜ நடந்து கொள்வது அப்பட்டமாக தெரிகிறது. பாஜவை சேர்ந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷனின் பாலியல் அத்துமீறல் மீது நடவடிக்கை கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களை ஒன்றிய அரசு கண்டுகொள்வதாக இல்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வீரர் வீராங்கனைகளின் குற்றச்சாட்டாக உள்ளது. நேற்று விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து புதிய நாடாளுமன்றத்தை நோக்கி வந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாருக்கும், மல்யுத்த வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் முதல் நாளிலே போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது, ஒன்றிய பாஜவின் செங்கோல் வளைந்திருப்பதை காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் சென்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். முடி சூடும் விழா முடிந்தததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது என்ற ராகுல்காந்தியின் வேதனையும் இதனையே பிரதிபலிக்கிறது. குடியரசு தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடக்கும் ஒரு விழாவில், ஜனநாயகம் எப்படி மலரும் என்பதுதான் மக்களின் கேள்வியாகும்

The post ஜனநாயகம் மலருமா? appeared first on Dinakaran.

Related Stories: