புதிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ் மந்திரங்கள்: தேவார பாடல்கள் பாடி ஆதீனங்கள் வாழ்த்து

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ் வேத மந்திரங்கள் ஓங்கி ஒலித்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தமிழுக்கும், சைவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேத மந்திரங்களை தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் முழங்கினர். திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோல் முன்பு மண்டியிட்டு சாஷ்டாங்கமாக வணங்கினார். பின்னர் செங்கோலை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆதீனங்களிடம் ஆசிபெற்றார். அதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரத்யேகமாக நிறுவப்பட்டிருந்த கண்ணாடி பேழையில் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

செங்கோலை செங்குத்தாக நிலைநிறுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை பிரதமர் ஏற்றினார். அப்போது வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது. தவில் உள்ளிட்ட வாத்தியங்களும் முழங்கின. தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் தமிழ் மந்திரங்களை முழங்கினர். ஹர ஹர மகாதேவ என்ற கோஷமும் எழுந்தது. மேலும் ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்கி ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று முடியும் தேவாரப் பாடலை உரக்கப் பாடி ஆதீனங்கள் வாழ்த்தினர். தமிழுக்கும், தமிழ் சைவ நெறிக்கும், தமிழகத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமான இந்த நிகழ்ச்சி, தேசிய ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

The post புதிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ் மந்திரங்கள்: தேவார பாடல்கள் பாடி ஆதீனங்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: