திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் நம்பிக்கை: தற்சார்பு தேசத்தின் விடியலுக்கான சாட்சி

புதுடெல்லி: ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் கனவுகளையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தற்சார்பு தேசத்தின் விடியலுக்கான சான்றாகவும் உள்ளது’ என திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், சில தருணங்கள் என்றென்றும் அழியாதவை. இன்று அத்தகைய நாள். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, அது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் கோயிலாகவும் உள்ளது. புதிய இந்தியாவின் கனவையும், நம்பிக்கையையும் புதிய நாடாளுமன்றம் பிரதிபலிக்கிறது. தற்சார்பு இந்தியாவின் விடியலுக்கான சான்றாகவும் உள்ளது. இது இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியைப் பற்றி உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், சோழர் காலத்தில் நீதி, அறம், நல்லாட்சி ஆகியவற்றின் அடையாளமாக விளங்கியது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகார மாற்றத்தின் அடையாளமாக இருந்த செங்கோலுக்கு உரிய மரியாதையை பாஜ அரசு அளித்துள்ளது. புனிதமான செங்கோலின் மகிமையை மீட்டெடுக்க முடிந்திருப்பது நமது அதிர்ஷ்டம். இந்த அவை கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் செங்கோல் எங்களுக்கு உத்வேகம் அளிக்கும். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகளாவிய ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயகம் என்பது இந்தியாவின் சிந்தனை மற்றும் பாரம்பரியம். ஆனால், பல ஆண்டுகால அந்நிய ஆட்சி இந்தியாவின் பெருமையை பறித்துவிட்டது. இன்று இந்தியா அந்த காலனித்துவ மனநிலையை விட்டு விலகி உள்ளது. 21ம் நூற்றாண்டின் இந்தியா தன்னம்பிக்கை நிறைந்தது. இது அடிமைத்தன மனோபாவத்தை விட்டொழித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும். இந்தியா முன்னேறும்போது, உலகம் முன்னேறுகிறது. இந்த புதிய நாடாளுமன்றம் இந்தியாவின் வளர்ச்சியால் உலகை முன்னோக்கி கொண்டு செல்லும். இந்த நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தலைவிதியையும் தீர்மானிக்கும். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் வறுமையை அகற்ற உதவும். அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், நாம் ஒன்றாக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். ‘வளர்ந்த இந்தியா’ பல நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதால் உலகளவில் நமக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இந்தியாவில் எதிர்காலத்தில், எம்பிக்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் காலத்தின் தேவையாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் நம்பிக்கை: தற்சார்பு தேசத்தின் விடியலுக்கான சாட்சி appeared first on Dinakaran.

Related Stories: