தமிழ் மறைகள் முழங்க, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க புதிய நாடாளுமன்றம் திறப்பு: தமிழ்நாட்டின் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் தேவாரம் பாடி, தமிழ் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி செங்கோலை நிறுவி, புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். டெல்லியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1921ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்றம் கட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார். பழைய நாடாளுமன்றத்தின் அருகே, 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள், பிரமாண்ட அரங்குகள், கலை அம்சத்துடன் புதிய நாடாளுமன்றம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டது.

ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காமல், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நேற்று காலை 7.30 மணிக்கு ஹோமம், பூஜைகளுடன் திறப்பு விழா தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் பாரம்பரிய உடையில், நெற்றியில் சந்தன பட்டையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நுழைவாயில் முன்பாக காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கர்நாடகாவின் சிருங்கேரி மடத்தை சேர்ந்த வேத விற்பன்னர்களுடன் இணைந்து கணபதி ஹோமத்தில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் தமிழ் மந்திரங்கள் ஓத, தேவாரம் உள்ளிட்ட மறைகள் முழங்க செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் மோடி விழுந்து வணங்கினார். மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை மோடியிடம் வழங்கினர். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு 2ம் கட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்களவை அரங்கில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜ எம்பிக்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் அரங்கில் கூடியிருந்தனர். மிகுந்த கரகோஷத்துடன் மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற திறப்பு குறித்து உரையாற்றினார். அங்கு, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் வாழ்த்து செய்திகளை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வாசித்தார். தொடர்ந்து, ரூ.75 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். இத்துடன் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் புகைப்படங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி, ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடம், நம்மை கனவுகளை காணச் செய்து அவற்றை நனவாக்கட்டும். இது நமது மகத்தான தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்’ என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

* நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 384 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது 1,272 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

* ஓவியங்கள், சுவர் பலகைகள், கற்சிற்பங்கள் மற்றும் உலோக சுவரோவியங்கள் உட்பட கிட்டத்தட்ட 5,000 கலைப்படைப்புகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

* புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

* புதிய மக்களவை தேசிய பறவையான மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* புதிய கட்டிடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளாகும்.

*ரூ.75 நாணயம் வெளியீடு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதையொட்டி,ரூ.75 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.ரூ.75 சிறப்பு நாணயத்தின் முன்பகுதியில் தேசிய சின்னமான அசோக சிங்க ஸ்தூபியும், பின்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடமும் பொறிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் மறைகள் முழங்க, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க புதிய நாடாளுமன்றம் திறப்பு: தமிழ்நாட்டின் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: