சென்னையை அணியை பொறுத்தவரை ருதுராஜ் – கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறது. நடப்பு சீசனில் கான்வே 625 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 564 ரன்களும் விளாசியுள்ளனர். அதேபோல் பவர் பிளேவில் விக்கெட் விழுந்தால் வெளுக்க ரஹானே, ஸ்பின்னர்களை பொளக்க சிவம் துபே, ரன்ரேட் குறைந்தால் ராயுடு, ஃபினிஷிங் செய்ய மொயின் அலி மற்றும் ஜடேஜா என்று சென்னை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அதேபோல் ஜடேஜா, மொயின் அலி மற்றும் தீக்சனா ஆகியோரின் சுழலும், பதிரானா, தீபக் சாஹர் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோரின் வேகமும் சரிசமமான நிலையில் உள்ளன.
மொயின் அலியின் பந்துவீச்சு மட்டும் ஆடுகளத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது. இதனால் சென்னை அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால் களத்தில் குஜராத் அணியை சர்ப்ரைஸ் செய்ய டோனி புதிய திட்டத்துடன் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். இன்னொரு பக்கம் குஜராத் அணியின் சுப்மன் கில் அசாத்திய ஃபார்மில் இருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சுப்மன் கில், விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோரின் பேட்டிங்கால் மட்டுமே குஜராத் அணி தப்பித்து வருகிறது. சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர் உள்ளிட்டோர் நடப்பு சீசனில் சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடியுள்ளனர்.
இதனால் சுப்மன் கில் விக்கெட் முக்கியமானதாக கருதப்படுகிறது. துவக்கத்திலேயே அவரை வீழ்த்தினால், குஜராத் அணியின் பேட்டிங் சரிந்தாலும் ஆச்சரியமில்லை. அதே நேரத்தில் ஹர்திக், மில்லர் பார்முக்கு திரும்பினால் சென்னைக்கு சோதனைதான். மேலும் குஜராத் அணியின் பந்துவீச்சு மிகவும் சவாலானதாக விளங்குகிறது. பர்பிள் கேப் ரேஸில் முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் குஜராத் அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் ஆதரவு இரு அணிகளுக்கு சமமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நடப்பு சாம்பியன் குஜராத் மீண்டும் கோப்பையை வெல்லுமா அல்லது நான்கு முறை சாம்பியனான சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் அடுத்த சீசனில் டோனி விளையாடினாலும் கேப்டனாக களமிறங்க அதிக வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டனாக டோனி விளையாடவுள்ள கடைசி ஐபிஎல் இறுதிப்போட்டி என்பதால், சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி 2வது முறையாக இன்று கோப்பையை வெல்ல ஆவேசம் காட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பது நிச்சயம்.
The post ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி; சென்னை – குஜராத் அணிகள் மோதல்; சாம்பியனாகப்போவது யார்?: எகிறும் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.