சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.துரைசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக சுமார் 8 மாதங்கள் பணியாற்றிய டி.ராஜா கடந்த 24ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். இதையடுத்து, இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன். ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்

The post சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: