ஐபிஎல் தொடர் 16வது சீசன் பைனல்: நடப்பு சாம்பியன் குஜராத்துடன் 4 முறை சாம்பியன் சிஎஸ்கே மோதல்

அகமதாபாத் : ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் பைனலில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதுகிறது. பரபரப்பான இப்போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள இந்த தொடரின் 16வது சீசன், கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 10 அணிகள் லீக் சுற்றில் களமிறங்கி மல்லுக்கட்டின. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அடுத்து சென்னையில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை பந்தாடி குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர்-2 ஆட்டத்தில் குஜராத் – மும்பை அணிகள் மோதின. அந்த போட்டியில் 62 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் அணி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், 16வது சீசனில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி, 4 முறை சாம்பியனான சென்னை அணியுடன் இன்று மோதுகிறது.

சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அவரை வெற்றியுடன் சாம்பியனான வழியனுப்பும் முனைப்புடன் சிஎஸ்கே வீரர்கள் வரிந்துகட்டுகின்றனர். ரன் குவிப்பில் ருதுராஜ், கான்வே, துபே, ரகானே, ஜடேஜா ஆகியோர் நேர்த்தியான ஆட்டத்தை வௌிப்படுத்தி வருகின்றனர். தீபக், துஷார், பதிரணா, தீக்‌ஷனா, ஜடேஜா, மொயீன் ஆகியோர் அடங்கிய பந்துவீச்சு கூட்டணியில் சிறப்பாக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குகிறது.

10வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ள சிஎஸ்கே 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதே சமயம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் கோப்பையை தக்கவைக்கும் உறுதியுடன் உறுமுகிறது. அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்று அசத்திய அந்த அணி, தொடர்ந்து 2வது ஆண்டிலும் பைனலுக்குள் நுழைந்துள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதலிடம் பிடித்த குஜராத், குவாலிபயர்-1ல் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதுடன் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் குஜராத் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நடப்பு தொடரில் 3 சதம் விளாசி சூப்பர் பார்மில் இருக்கும் கில், சாகா, ஹர்திக், சாய், மில்லர், ரஷித், விஜய், திவாதியா என டைட்டன்ஸ் பேட்டிங் வரிசையும் மிரட்டலாக அமைந்துள்ளது. ஷமி, மோகித், நூர், ரஷித் பந்துவீச்சும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது, மொத்தத்தில் சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டியில் அனல் பறப்பதுடன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமையும்.

நேருக்கு நேர்…

ஐபிஎல் போட்டியில் இந்த 2 அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில் குஜராத்துடன் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவிய சென்னை, நடப்பு சீசனின் தொடக்க லீக் ஆட்டத்திலும் மண்ணைக் கவ்வியது. எனினும், குவாலிபயர்-1 ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது சிஎஸ்கே வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.

காத்திருக்கும் பரிசு மழை!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ₹20 கோடி வழங்கப்பட உள்ளது. பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ₹13 கோடி கிடைக்கும். எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர்-2ல் தோற்ற அணிகளுக்கு ₹7 கோடி (மும்பை), ₹6.5 கோடி (லக்னோ) வழங்கப்படும். ரன் குவிப்பில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தும் வீரர், விக்கெட் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு பர்ப்பிள் தொப்பி பெறும் வீரர், வளர்ந்து வரும் வீரர், மதிப்பு வாய்ந்த வீரர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இம்முறை மொத்த பரிசுத் தொகையாக ₹46.5 கோடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் தொடர் 16வது சீசன் பைனல்: நடப்பு சாம்பியன் குஜராத்துடன் 4 முறை சாம்பியன் சிஎஸ்கே மோதல் appeared first on Dinakaran.

Related Stories: