இதுவரை 34 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் 400 ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான டெண்டர் வெளியீடு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் இதுவரை 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை கொண்டு சேர்க்கும் வகையில் 400 ரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
‘மேக் இன் இந்தியா’ என்பது இந்தியாவின் முதலீட்டை எளிதாக்குவதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்ட தேசிய திட்டமாகும். இதன் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து, பொதுமக்களுக்குத் தேவையான பல்வகை வசதிகளைக் கொண்டு வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களுக்கு இடையே அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பீகார், ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படாத நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் நாட்டின் 28 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படாததால், வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அசாமில் அடுத்த வாரம் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இதுகுறித்து ரயில்வே வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லி-வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என, 21 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் மாதம் இறுதிக்குள், பீகாரில் உள்ள பாட்னா-ஹாத்தியா மற்றும் பாட்னா-ராஞ்சி (ஜார்கண்ட்) மற்றும் கோவா-மும்பை (மகாராஷ்டிரா) இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் 28 மாநிலங்களுக்கும் வந்தே பாரத் ரயில் சேவைகள் கிடைக்கும். இதுவரை 34 வந்தே பாரத் ரயில்கள் (17 ஜோடி) இயக்கப்பட்டுள்ளன. மே 29ம் தேதி அசாமில் வந்தே பாரத் இயக்கப்பட்ட உடன், அதன் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயரும். வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில்கள் செல்லும். அதற்காக 400 வந்தே பாரத் ரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வாரந்தோறும் ஒரு வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் எம்சிஎப், ரேபரேலி, லத்தூர், மகாராஷ்டிரா பெல் ஆகிய இடங்களில் வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி தொடங்கப் போகிறது, பின்னர் வாரத்திற்கு 3 முதல் 4 ரயில்களின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

The post இதுவரை 34 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் 400 ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான டெண்டர் வெளியீடு: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: