ஒன்றிய அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி மவுனத்தை கலைத்து பதில் சொல்ல வேண்டும்: தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா கேள்வி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் கவுடா இன்று சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து, ராஜீவ் கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வரும் மோடியிடம் 9 கேள்விகளை கேட்கிறேன். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். இந்தியாவில் விலைவாசி உயர்வும் வேலையின்மையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் உருவெடுத்திருப்பது ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும் மோடியின் நண்பர்களுக்கு அரசு சொத்துகள் விற்கப்படுவது ஏன்? ஏழைகளின் கூலி குறைந்துள்ள நிலையில், வேலையின்மையும் 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது அழிவுகரமான நிலையாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக, மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் சிறு தொழில்கள் அழிந்தன. விவசாயத்தை தாரை வார்க்கும் மோடியின் முயற்சி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. தானியங்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடர்பான விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஒன்றிய அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை. உரம் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டதோடு, விவசாயப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு மேலும் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் டெபாசிட்தாரர்களின் சேமிப்பை பணயம் வைத்து எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற தேசிய சொத்துக்கள், அதானி போன்ற ஆபத்தான நிறுவனங்களுக்கு முதலீடுகள் மற்றும் கடன்களாக வழங்கப்பட்டது என்பதை ‘மோதானி மெகா முறைகேடு’ அம்பலப்படுத்தியது. பாஜகவினரின் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 2014 முதல் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக பிரிவினையை ஊக்குவிக்கும் அதே வேளையில், டெல்லி, மணிப்பூர் மற்றும் நாட்டின் பிற இடங்களில் நடைபெறும் வன்முறையை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மவுனம் காக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களை பழிவாங்கும் அரசியலை தான் பாஜக செய்கிறது. அருணாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை மிருக பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி கவிழ்த்துவிட்டனர். கொரோனா காரணமாக 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்த போதிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசு மறுக்கிறது. திடீரென பொதுமுடக்கத்தை அறிவித்து அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கவில்லை. 2வது கொரோனா அலையின் போது, மோடி அரசு அதனை எதிர்கொள்ள தயாராக இல்லாததால் அதிக மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால் மோடியோ, ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி மவுனத்தை கலைத்து பதில் சொல்ல வேண்டும்: தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: