பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான ஆய்வு கூட்டம் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்ற வேண்டும்

*ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க ஆசிரியர்கள் முழு மனதுடன் பணியாற்ற வேண்டும், என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் எதிர்வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து பள்ளிகள் வாரியாக கேட்டறிந்தார். அப்போது, பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், மாணவர்கள் தேர்வு எழுதாமல் நின்றுவிட்டாலும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது எனவும், கொரோனா தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி பிரச்னை ஏற்பட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அப்போது கலெக்டர் வளர்மதி ஆசிரியர்கள் இருந்தும் அந்த பாடப்பிரிவில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை கேட்டறிந்தார். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை நடத்தவில்லையா? தனியார் கல்வி நிறுவனங்கள் கொரோனா கால இடைவெளியை பூர்த்தி செய்தும், மற்ற மாவட்டங்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி அதை ஏன் ராணிப்பேட்டை மாவட்டம் எய்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது: நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தொடக்க நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் மறுநாளில் தேர்வு நடத்தி அறிவை பரிசோதிக்க வேண்டும். மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் பாடம் நடத்த வேண்டும். அடிக்கடி நடத்தப்பட்ட பாடங்கள் குறித்து தேர்வு வைத்து மாணவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கற்றல் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி தலைமையாசிரியர்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். ஆசிரியர்களிடையே உள்ள பிரச்னைகளை தீர்த்து ஒற்றுமையுடன் பணியாற்றுவதை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்த வேண்டும். இதன் மூலமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் நல்ல தேர்ச்சி ஏற்படும்.

எனவே, 6ம் வகுப்பு முதலான மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பாடங்களை கற்பிக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்தாத பிள்ளைகளின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரைகளை வழங்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு இதனை கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்றுவதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான ஆய்வு கூட்டம் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: