இந்திய அணிக்கு கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் குவித்தது. சுப்மன்கில் அதிரடியாக 60 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 129 ரன் விளாசினார். சாய்சுதர்சன் 43 (31பந்து), கேப்டன் ஹர்திக்பாண்டியா நாட் அவுட்டாக 28 (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில், நேஹால் வதேரா 4, ரோகித்சர்மா 8 கேமரூன் கிரீன் 30, திலக்வர்மா 14 பந்தில் 43, சூர்யகுமார் யாதவ் 61 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) அடிக்க பின்னர் வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்ஆகினர்.

18.2 ஓவரில் மும்பை 171 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 62 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. குஜராத் பவுலிங்கில் மோகித்சர்மா 5, ஷமி, ரஷித்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: “வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குப் பின்னால் நிறைய கடின உழைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அது போட்டியில் வெளிப்படுகிறது. வீரர்கள் மத்தியில் தெளிவு மற்றும் நம்பிக்கை நன்றாகவே தெரிகிறது. கில் மிக சிறப்பாக ஆடினார். அவரது ஆட்டம் மிக நேர்த்தியாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பந்துவீசுவதும், அதை அடிப்பதுமாக இருந்தது அவரது ஆட்டம்.

அடுத்த சில வருடங்களில் குஜராத் அணிக்கும் இந்திய அணிக்கும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக கில் வருவார். ரஷித் கான் பற்றி ஏற்கனவே நிறைய பேசிவிட்டோம். அணி கடினமான சூழலில் இருக்கும்போது, அவர் ஒருவரை தான் நான் மிகவும் நம்புகிறேன். அவரும் பலமுறை என் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். இன்று சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். போட்டியில் 100 சதவீதம் உழைப்பை கொடுத்தோம். இதன் வெளிப்பாடாகவே எங்களுக்கு சாதகமான முடிவு வந்திருக்கிறது. நாக்-அவுட் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். இப்போது பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

The post இந்திய அணிக்கு கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: