மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் ரூ.1.50 கோடி மானியம் பெற சிறப்பு திட்டம்

திருப்பூர், மே 27: திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தொழில் முனைவோராக ரூ.1.50 கோடி வரை கடன் வழங்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில், பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த (நேரடி வேளாண்மை தவிர்த்த) தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் (அதிகபட்சம்) ரூ.1.50 கோடி பின்முனை மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின், விரிவாக்கத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 35 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1.50 கோடி) பின்முனை மானியமாக வழங்கப்படும். தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும்.

கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், இது தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய மேலாளரை 0421-247507, 9500713022 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் ரூ.1.50 கோடி மானியம் பெற சிறப்பு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: