சுதந்திரம் பெற்று முதல்முறையாக கோத்தகிரி, தாலமொக்கை இருளர் பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி

கோத்தகிரி, மே.27: கோத்தகிரியில் உள்ள பழங்குடியின கிராமத்திற்கு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டின் கடைகோடி கிராமமான தாலமொக்கை இருளர் பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக 3 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைத்து தந்த தமிழக அரசுக்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன் நன்றி தெரிவித்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், தோடர், காட்டு நாயக்கர், பணியர், கோத்தர் உட்பட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வியல் நிலையில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர், மின்சாரம், குடியிருப்பு போன்றவை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், கல்வி மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைக்கோடி கிராமமான கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ள சுமார் 100 மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வாழக்கூடிய தாலமொக்கை கிராமம். கோணவக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயப்பிரியா ஹரிகரனின் சீரிய முயற்ச்சியால் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள், சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி என்பது எட்டா கனியாக இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பழங்குடியினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் 3 கோடி ரூபாய் சிறப்பு நிதியின் கீழ் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரமான சாலை அமைத்து தரப்பட்டது.இதனை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கோத்தகிரி சேர்மென் ராம்குமார் ஆகியோர் புதிய சாலையை பயன் பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அப்போது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முறையாக தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டதால் தங்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

The post சுதந்திரம் பெற்று முதல்முறையாக கோத்தகிரி, தாலமொக்கை இருளர் பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி appeared first on Dinakaran.

Related Stories: