பாடாலூர், மே27:ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவையொட்டி குடிகள் மாநாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து வருவாய் தீர்வாயம் சார்பில் முடிவு நாளன்று குடிகள் மாநாடு நடைபெற்றது. குடிகள் மாநாட்டிற்கு ஆர்டிஓ நிறைமதி தலைமை வகித்தார். வருவாய் வட்டாட்சியர் முத்துக்குமரன், சமூக நலப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கவிதா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வருவாய் தீர்வாயத்தின் நோக்கம் மற்றும் அதன் பயன்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
தமிழக விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழக விவசாய கட்சித் தலைவர் ராமராஜன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்னைகளுக்கு மனு அளித்தால் தீர்வு காணமுடியும்.அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம் (முழுபுலம் உட்பிரிவு), குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம், சாதி சான்றிதழ், இதர மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில், மண்டல துணை வட்டாட்சியர் கருணாகரன், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல், கலையரசி, ஜமுனா, ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு appeared first on Dinakaran.