தமிழ்நாடு முழுவதும் போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு: ஆரூத்ரா உள்ளிட்ட வழக்குகளில் 80 பேர் கைது; ஐஜி ஆசியம்மாள் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கரை மாதங்களில் பொதுமக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஐஜி ஆசியம்மாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 1.1.2023 முதல் 15.5.2023 வரை 347 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 791 ரூபாய் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2023ம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் கடந்த 1.1.2023ம் தேதி முதல் 16.5.2023ம் தேதி வரை காலக்கட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்த 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஆருத்ரா வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய ஏஜெண்டுகளான திருவள்ளூர் வரதராஜநகர் ராஜராஜசோழன் தெருவை சேர்ந்த சசிக்குமார், ராணிபேட்டை மாவட்டம் சோழிங்கட்டூர் அருகே ரெண்டடி கிராமத்தை சேர்ந்த உதயகுமார், ராணிபேட்டை மாவட்டம் சயனபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ், சென்னை ஆண்ரசன்பட் பகுதியை சேர்ந்த மாலதி, ராணிபேட்டை மாவட்டம் பெரும்புலிபாக்கம் அருகே உள்ள ஆவலூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி கிழிஞ்சூர் பகுதியை சேர்ந்த நவீன், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரூத்ரா வழக்கு பொருத்தமட்டில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், திருச்சியை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான கடந்த நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த வந்த பிரபாகரன் என்பவரை கைது செய்துள்ளோம். ஆருத்ரா வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஆர்.கே.சுரேஷ் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கரை மாதங்களில் புதிய வழக்கு மற்றும் பழைய வழக்குகள் என மொத்தம் 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு முழுவதும் போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு: ஆரூத்ரா உள்ளிட்ட வழக்குகளில் 80 பேர் கைது; ஐஜி ஆசியம்மாள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: