சில்லி பாயின்ட்…!

* யு-23 ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கத்தாரில் நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச்சுற்றுப்போட்டி இந்த ஆண்டு செப்.4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் 10 பிரிவில் தலா 4 அணிகளும், கடைசி பிரிவில் 3 அணிகளும் என மெத்தம் 43 அணிகள் களம் காண உள்ளன. இந்திய அணி இடம் பெற்றுள்ள ஜி பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுகள், சீனா என வலுவான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

* முருகப்பா குழுமம் கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளை ஊக்குவிப்பதில், முதன்மையான தொழிற் நிறுவனமாக உள்ளது. கூடவே அந்த குழுமம், ‘முருகப்பா இளையோர் கால்பந்து அகடமி’யை நடத்துகிறது. இந்த அகடமியின் மேம்பாடு, வீரர்களின் வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு, ஜெர்மனியின் புகழ்பெற்ற புருஷ்யா டாட்மவுண்ட்(பிவிபி) கால்பந்து கிளப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று காணொளி வாயிலாக செய்யப்பட்டது. கூடவே ஒப்பந்தத்தின் பயன்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து முருகப்பா குழுமத்தின் எம்எம் முருகப்பன், பிவிபி ஆசிய நிர்வாக இயக்குநர் சுரேஷ் லட்சுமணன் ஆகியோர் விளக்கினர்.

* பிரேசில் கால்பந்து வீரர் வினிசியஸ் ஜூனியர்(22). இவர் ஸ்பெயினின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக 2018ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். களத்தில் இருக்கும் போது அவருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறியுடன் கேலி செய்வது புகாரானது. ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் வினிசியஸ், ரசிகர்களை எச்சரிக்கவும் செய்தார். அதனால் ஸ்பெயின் ரசிகர்களின் இனவெறி உலக அளவில் பேசும் பொருளானது. எனவே அந்த ரசிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் கிளப் தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் ‘ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல’ என்ற கருத்தையும் கிளப் நிர்வாகிகள் சிலர் சொல்லி வருகின்றனர்.

* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. ஆறுதல் வெற்றி ஆசையில் இந்திய மகளிர், களம் காண காத்திருக்கின்றனர்.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூன் 7ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் அணிக்கு கோப்பையுடன் 1.6மில்லியன் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. இது நேற்று இந்திய மதிப்பில் சுமார் 13.21 கோடி ரூபாயாகும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணி, 8லட்சம் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் 6.55கோடி ரூபாய்) பரிசாக பெறும். மேலும் 3வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு 4.5லட்சம் டாலர்களும், 4வது இடம் பிடித்துள்ள இங்கிலாந்துக்கு 3.5லட்சம் டாலர்களும், 5வது இடம் பிடித்த இலங்கைக்கு 2லட்சம் டாலர்களும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். எஞ்சிய 4 இடங்களில் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கேதேசம் அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர் பரிசாக தரப்படும்.

The post சில்லி பாயின்ட்…! appeared first on Dinakaran.

Related Stories: