கலைஞர் சிலை திறப்பு, நூற்றாண்டு விழா தொடக்கம் தமிழக முதல்வர் வரும் 11ம் தேதி சேலம் வருகை: 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்

சேலம்: சேலத்தில் கலைஞர் சிலை திறப்பு மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கம் விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி சேலம் வருகிறார். இதுதொடர்பாக, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் முத்திரைச் சாதனைகள் பல படைத்தது சேலம் மாவட்டம். சேலம் மாநகரில் 1944ல் நடைபெற்ற மாநாட்டில்தான் நீதிக்கட்சி என்பது, பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தால் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மாவட்டத்தில் தளகர்த்தராக விளங்கி கழகத்தைக் கட்டிக் காத்தார்.

சேலத்திற்கு இரும்பாலை, ரயில்வே கோட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, மாநகராட்சிக்காக ரூ.283 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.183 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.136 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஏத்தாப்பூரில் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர். கலைஞரை போலவே, சேலம் மாவட்ட வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் நடந்த அரசு விழாவில் ரூ.1,242 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இதனிடையே, வரும் 11ம் தேதி சேலம் மாநகருக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், அவரின் நூற்றாண்டு விழாவை சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, மறுநாள் 12ம் தேதியன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இந்த சிறப்பான நிகழ்ச்சிகளுக்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கிடுவோம். இதுதொடர்பாக ஆலோசிக்க வரும் 30ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

 

The post கலைஞர் சிலை திறப்பு, நூற்றாண்டு விழா தொடக்கம் தமிழக முதல்வர் வரும் 11ம் தேதி சேலம் வருகை: 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: