அக்கரப்பாக்கம் சவுடுமண் குவாரியில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சக டிரைவருக்கு போலீஸ் வலை

ஊத்துக்கோட்டை, மே 26: ஊத்துக்கோட்டை அருகே உள்ள அக்கரப்பாக்கம் சவுடுமண் குவாரியில் லாரி டிரைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, சக டிரைவரை தேடி வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், அரசின் சவுடுமண் குவாரி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரியில் சவுடுமண் எடுத்து செல்கின்றனர். இதனால், இந்த பகுதியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், மண் எடுத்து செல்கின்றன. இதற்காக குவாரியில் பில் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை சவுடுமண் எடுப்பதற்காக ஆத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (28), கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த டிரைவர் சூர்யா (29) ஆகியோர் லாரிகளில் அங்கு வந்துள்ளனர். அப்போது, யார் முதலில் சென்று மண் எடுப்பது என்ற போட்டியில், ஒருவரை ஒருவர் முந்திச் சென்றுள்ளனர். இதில், பிரகாஷ் முந்திச் சென்று, பில் போடும் இடத்திற்கு வந்து, பில் போடும்படி அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சூர்யா, பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரகாஷை வெட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிரகாஷ், அங்கேயே லாரியை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

ஆனால், சூர்யா விரட்டிச்சென்று பிரகாஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அப்போது, சூர்யா தான் நிறுத்தி வைத்திருந்த லாரியில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்.ஐ வினோத் ஆகியோர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.

The post அக்கரப்பாக்கம் சவுடுமண் குவாரியில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சக டிரைவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: