5.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு மாதம் 10,387 டன் ரேஷன் அரிசி விநியோகம்

கிருஷ்ணகிரி, மே 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ், 5 லட்சத்து 60 ஆயிரத்து 634 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மாதம் தோறும் 10 ஆயிரத்து 387 டன் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 34 பொது விநியோகத் திட்ட முழுநேர ரேஷன் கடைகளும், 2 பகுதிநேர பல்பொருள் அங்காடி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 525 முழுநேர ேரஷன் கடைகளும், 533 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 1,058 கூட்டுறவு சங்க பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை மட்டுமன்றி, ரேஷன் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் பெறமுடியாத பின்தங்கிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 168 நகரும் ரேஷன் கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 29முழுநேர ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.

இங்கு கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் ‘அந்தியோதியா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் 66,564 குடும்ப அட்டைகளும், முன்னுரிமை குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் 2,33,507 குடும்ப அட்டைகளும், முன்னுரிமை அற்ற திட்டத்தின் கீழ் 2,60,195 குடும்ப அட்டைகளும், பண்டமில்லா குடும்ப அட்டைகள் 368 என மொத்தம் 5,60,634 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகளுக்கு மாதம் தோறும் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய 2ம் குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்திற்கு இனங்க வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர குடும்ப அட்டைகளுக்கு கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2244.463 டன் அரிசி மற்றும் 106.537 டன் சர்க்கரை வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவு குடும்ப அட்டைதாரர்களுக்கு 8125.650 டன் அரிசியும், 708.338 டன் சர்க்கரை, 327.721 டன் கோதுமை, 433.068 டன் துவரம் பருப்பு மற்றும் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு தலா 1 லிட்டர் வீதம் பாமாயில் 4,80,590 எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. இதே போல், 944 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 15.546 டன் அரிசி, 1.513 டன் சர்க்கரை, 1.500 டன் கோதுமை, 3.106 டன் துவரம் பருப்பு மற்றும் குடும்ப அட்டைதாரருக்கு தலா 1லிட்டர் வீதம் பாமாயில் 868 எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. மேலும், அன்னபூர்ணா திட்டத்தின் கீழ், 1.630 டன் அரிசி வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு 16.865 டன் அரிசி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 634 குடும்ப அட்டைதாரர்கள் மாதத்திற்கு, 10 ஆயிரத்து 387 டன் ரேஷன் அரிசி பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

The post 5.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு மாதம் 10,387 டன் ரேஷன் அரிசி விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: