புதுக்கோட்டை மாவட்ட அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்

புதுக்கோட்டை, மே 26: எண்ணும் எழுத்தும் மாவட்ட அளவிலான மூன்று நாள் பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா தொடங்கி வைத்தார். தமிழக அரசு கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கவும், மாணவர்களுக்கு புரிதலுடன் கூடிய அடிப்படை திறன்களை மேம்படுத்தவும் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தியது. இத்திட்டமானது நடப்பு கல்வி ஆண்டு நான்கு மற்றும் 5 வகுப்புகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியானது மூன்று நாட்கள் வழங்கப்பட உள்ளது.

ஒன்றியங்களில் பயிற்சி வழங்க உள்ள முதன்மை கருத்தாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி புதுக்கோட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மே 25 முதல் மே 27 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியை தொடங்கி வைத்து, முதன்மை கல்வி அலுவலர் பேசும்போது, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு பிறகு ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்களின் புரிதல் மற்றும் அடிப்படை கல்வி திறன்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் வரும் கல்வி ஆண்டில் நான்கு மற்றும் 5 வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள.

இத்திட்டத்தினை ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்த்து மாணவர்களின் புரிதலுடன் கூடிய அடிப்படை திறனை மேம்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடக்க விழாவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் நடராஜன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் புளோரா, ஏஞ்சலின் ரூபி ஆகியோர் பங்கு பெற்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்ட அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: