அரிஸ்டோ மேம்பாலம் 29-ம் தேதி திறப்பு: அமைச்சர் கே.என். நேரு தகவல்

திருச்சி: அரிஸ்டோ மேம்பாலம் வரும் 29-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 842 பேரும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 722 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போதிய வகுப்பறை வசதிகள் இல்லை. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடம் கட்ட எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதனை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து பள்ளி மாதிரியை பார்வையிட்டார். தொடர்ந்து பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: எடமலைப்புதூரில் மாநகராட்சி பள்ளிகள் ரூ. 9 கோடியே 90 லட்சம் செலவில் 1000 மாணவர்கள் படிக்கும் வகையில், அமைக்கப்படவுள்ளது.

விரைவில் இப்பள்ளி கட்டிட பணி நிறைவடையும். திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரிஸ்டோ மேம்பால பணிகள் தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ளது. வரும் 29-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த பணிகள் விரைவில் நிறைவடையாததற்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறை, கொரோனா பரவல் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததுதான்.

திருச்சி மாவட்டத்தில் முடிவடையாமல் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும். பஞ்சப்பூரில் அமையவுள்ள பேருந்து நிலையத்தில், மொத்தம் 3 லட்சம் சதுரஅடியில் வியாபாரிகளுக்கென்று பிரத்யேகமாக வணிகம் செய்ய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுகளின்போது, கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post அரிஸ்டோ மேம்பாலம் 29-ம் தேதி திறப்பு: அமைச்சர் கே.என். நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: