குவாலிபயர்-2 போட்டியில் இன்று குஜராத் – மும்பை பலப்பரீட்சை: பைனல் வாய்ப்பு யாருக்கு?

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடர் பிளே ஆப் சுற்றின் குவாலிபயர்-2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பான லீக் சுற்று நிறைவடைந்து, பரபரப்பான பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் – சென்னை அணிகளிடையே நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில், சென்னை அணி போராடி வென்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அடுத்து 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த லக்னோ – மும்பை அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

லக்னோ அணி ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், 2வது குவாலிபயர் ஆட்டம் இன்று அகமதாபாத் நகரில் நடக்கிறது. இப்போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டரில் லக்னோ அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி, அதே உற்சாகத்துடன் குஜராத் அணியின் சவாலை சந்திக்கிறது.

ரோகித் தலைமையிலான மும்பை அணியில் இஷான், கிரீன், சூர்யகுமார், டிம் டேவிட், திலக் வர்மா, நெஹல் என அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் எப்போதும் அசத்தும் சாவ்லா, ஜோர்டன், ஜாசன் மற்றும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆகாஷ் மத்வால் ஆகியோர் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். அதே சமயம் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.

சூப்பர் பார்மில் உள்ள கில் அந்த அணியின் பெரும் பலம். சாஹா, மில்லர், ஹர்திக், ரஷித் என நடப்பு சாம்பியன் பேட்டிங் வரிசையும் மிரட்டலாகவே அமைந்துள்ளது. ஷமி, நூர், ரஷித் பந்துவீச்சு கூட்டணியும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இரு அணிகளுமே இப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இதுவரை…
* 2022ல் அறிமுகமான குஜராத் இதுவரை 3 முறை மும்பை அணியுடன் மோதியுள்ளது. அவற்றில் மும்பை 2-1 என முன்னிலை வகிக்கிறது.
* நடப்பு தொடரில் இரு அணிகளும் லீக் சுற்றில் 2 முறை மோதின. ஏப்.25ல் நடந்த 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் 55 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. மே 12ல் நடந்த 51வது லீக் ஆட்டத்தில் மும்பை 27 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
* இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளது. மும்பை அதிகபட்சமாக 218 ரன், குஜராத் 207 ரன் குவித்துள்ளன.
* நடப்புத் தொடரின் அதிகபட்ச ரன் குவிப்பில்… குஜராத் தரப்பில் கில் 722 ரன், மும்பை தரப்பில் சூர்யகுமார் 544 ரன் விளாசி உள்ளனர்.
* விக்கெட் வேட்டையில் குஜராத் வீரர்கள் ஷமி (26 விக்கெட்), ரஷித் கான் (25 விக்கெட்) முதல் 2 இடங்களில் உள்ளனர். மும்பை வீரர் பிஷ்னோய் (16 விக்கெட்) 12வது இடத்தில் இருக்கிறார்.

யாருப்பா இந்த மத்வால்!
லக்்ேனா சூப்பர் ஜயன்ட்ஸ்க்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில், 3.3 ஓவர் பந்துவீசி 5 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் மும்பை இந்தியன்ஸ் வேகம் ஆகாஷ் மத்வால் (17 பந்தில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை). ஆட்ட நாயகன் விருது பெற்ற அவரது அற்புதமான பந்துவீச்சு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாருப்பா இந்த மத்வால் (29 வயது) என்று தேடாத நெட்டிசன்களே இல்லை என்ற அளவுக்கு சமூக ஊடங்களில் மத்வால் பெயர் வைரலாகிக் கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், தொடக்கத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தான் விளையாடி வந்திருக்கிறார்.

பிசிசிஐ ஏற்பாடு செய்த தேர்வு முகாமில் கலந்துகொண்டு பயிற்சியாளர் வாசிம் ஜாபரின் கவனத்தை ஈர்க்க, மாநில அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். முஷ்டாக் அலி டிராபி, ரஞ்சி, விஜய் ஹசாரே டிராபி என உள்ளூர் போட்டிகளில் முத்திரை பதித்தவர், இப்போது ஐபிஎல் தொடரிலும் அசத்தி தன் மீதான எதிர்பார்ப்பை எகிறவிட்டிருக்கிறார்.

The post குவாலிபயர்-2 போட்டியில் இன்று குஜராத் – மும்பை பலப்பரீட்சை: பைனல் வாய்ப்பு யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: