அரசு பஸ்சில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயணச்சீட்டு கட்டணம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது.

அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதும், பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் அதனை செயல்படுத்தி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை. மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பஸ்சில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: