சேக்கிழாரின் தனித்துவம்

தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் `தெய்வ’ என்ற அடைமொழி உண்டு. முதலாமவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இரண்டாமவர் தெய்வச் சேக்கிழார். கற்போரை தெய்வநிலைக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கியத்தைத் தந்த காரணத்தால் இவர்கள் இருவருக்கும் `தெய்வ’ அடைமொழியை ஆன்றோர் உலகம் அளித்துள்ளது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது இலக்கணம் என்றால், இந்த இலக்கணத்தை விவரிக்கும் இலக்கியம் பெரியபுராணமாகும். இறைவனை வழிபடுகிறோம்; இறையடியார்களையும் வழிபடுகிறோம். வழிபடுவது மட்டுமே முக்கியமல்ல; மாறாக, இறைநிலையில் கலந்து அம்மயமாதல் மிகவும் அவசியமாகும். பக்தி என்பது படிநிலை; முக்தி என்பதுதான் முடிநிலை. அவ்வகையில், படிநிலையில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து இறைநிலையை எய்தியவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஆவார்கள். அந்த அடியார்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள நூலே பெரியபுராணமாகும்.

இதை இயற்றிய தெய்வச் சேக்கிழார் இந்நூலக்குச் சூட்டிய பெயர் `திருத்தொண்டர் புராணம்’ என்பதாகும். ஆனால் இதன் தன்மையால் `பெரியபுராணம்’ என்னும் பெயரை இது பெற்றது. இந்நூலில் 63 நாயன்மார்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, இடம், மக்களின் வாழ்வியல், அரசாங்கம், சமயம், பண்பாடு என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளளது. சேக்கிழார் அநபாயச் சோழனிடம் முதலமைச்சராக இருந்தவர். மன்னனின் வேண்டுகோளின்படி இந்த இலக்கியத்தை வடித்துத்தந்தார். அப்படி வடிக்கும்போதும் அடியார்தம் வாழ்வைப் படம் பிடிக்கும்போதும் பக்திச்சுவை நிறைத்து வழங்கினார் தெய்வச் சேக்கிழார்.

அதனால்தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இவரை,

“பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவிவலவ”

என்று போற்றிப் புகழ்ந்தார்.

பக்திச்சுவையுடன் இருக்கும் இந்தப் பரமனடியார்கள் வரலாற்றைப் பயிலும் நாமும் அவர்களைப்போல் தெய்வநிலையை எய்தமுடியும் என்பது திண்ணம். உலகத்திலேயே அடியார்களைப் பற்றிய வரலாறாக அமைந்த முதன்மையான பெரியநூல் பெரியபுராணம் மட்டுமே. அதையும் தெய்வச்சேக்கிழார் வெறும் கதை சொல்லலாகக் கொண்டு செல்லாமல் அடியார்கள் வாழ்ந்த ஒவ்வொரு பகுதிக்கும் சென்று களஆய்வு மேற்கொண்டு பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மற்ற இலக்கியங்களைப் படைத்த அல்லது காப்பியங்களைப் படைத்த ஆசிரியர்களைவிட சேக்கிழாருக்கு ஓர் இக்கட்டு இருந்தது. மற்றவர்களெல்லாம் காப்பியத் தலைவராக ஒருவரை மட்டுமே பாடினர். ஆனால், சேக்கிழார் மட்டும் அறுபத்து மூவருடைய வரலாற்றையும் தொகையடியார்கள் ஒன்பது பேருடைய வரலாற்றையும் பாட வேண்டியது.

அதனால், காப்பியம் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்த சுந்தரமூர்த்தி நாயனாரைக் காப்பியத் தலைவனாக்கி, அனைவரின் வரலாற்றையும் சுந்தரர் காட்டிய “திருத்தொண்டத்தொகை”யின் வரிசை அடிப்படையிலேயே அமைந்துள்ளார். அதுமட்டுமின்றி பெரியபுராணம்தான் முதன்முதலில் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும். சங்க இலக்கியங்கள் மன்னர்களைப் பாடின. ஆகவே அவை முடிமக்களையே பாடிய இலக்கியங்களாகும். காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் குடிமக்களைப் பற்றிப் பேசுகிறது என்றும் அதுதான் முதல் குடிமக்கள் காப்பியம் என்றும் சிலர் கூறுவர்.

எனினும் அது குடிமக்களிலும் செல்வச் செழிப்பில் உயர்ந்தவர்களைப் பற்றியே பாடியது. ஆனால், பெரியபுராணம் மட்டும்தான் அரசன் முதல் ஆண்டிவரை, அந்தணர் முதல் வேளாளர் வரை அனைவரையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் பாடியது. அதனால் பெரியபுராணம் மட்டுமே முதன்முதலில் தோன்றிய சாமானியர்களுக்கும் பொதுவான குடிமக்கள் காப்பியம் ஆகும். இதில் இடம்பெற்றள்ள அடியார்களின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர்” என்று குறிப்படுகிறார் தெய்வச்சேக்கிழார்.

அவர்களுக்கு வறுமை என்ற ஒன்றும் கிடையாது. செல்வம் என்ற ஒன்றும் கிடையாது. இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான். அவர்கள் பிச்சை ஏற்கும் திருவோட்டைப் பார்த்தாலும் சரி, உயர்வான தங்கத்தைப் பார்த்தாலும் சரி, இரண்டையும் ஒன்றாகவே பார்த்தனர். இதுதான் அடியார்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இன்னு பல அடியார்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். நேர்த்திக்கடன் என்று சொல்லிக்கொண்டு, தங்கரதம் இழுக்கிறார்கள் (பணம் கட்டி). பிறகு, `நான் இன்று தங்கத் தேர் இழுத்தேன்’ என்று ஆணவத்துடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

அவ்வாறெனில் தங்கம்தான் பெரியதா? தங்கத்தை உயர்த்திச் சொன்னால் அதன்மீது பவனிவரும் பகவான் உயர்ந்தவர் என்பது குறைந்து போகவில்லையா? தங்கமாக இருப்பினும் தகரமாக இருப்பினும் ஒன்றாகக் காண்பதே அடியார் இயல்பு என்பது சேக்கிழார் கருத்து. நம் நாட்டில்தான் பிச்சை எடுக்கும் ஓட்டிற்கு `திருவோடு’ என்று `திரு’ எனும் அடைவு கொடுத்து அழைக்கிறோம்.

தங்கத்தாலோ, வெள்ளியாலோ செய்யப்பட்ட எந்த பாத்திரத்திற்கும் `திரு’ என்று அடைமொழியில்லை. ஆனால், ஏதுமற்ற ஆண்டியின் கையில் இருக்கும் ஓட்டிற்கே திருவோடு என்ற சிறப்பு வந்தது என்பது சிந்திக்கத் தக்கதாகும். அடியார் இயல்பைச் செல்லும்போது இப்படி அறிமுகம் செய்த சேக்கிழார், அடியார்களின் வரலாறுகளைச் சொல்லும்போதும் சகலரையும் சமாகவே பாவித்தார். திருஞான சம்பந்தர் பிறந்த சீர்காழியை எந்த அளவுக்கு வர்ணிக்கிறாரோ, அதே அளவிற்கு நந்தனர் பிறந்த ஆதனூரிலுள்ள புலைப்பாடியையும் வருணித்துப் பாடிக் காட்டியிருக்கிறார்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”

என்பது திருக்குறள். சேக்கிழார் சமநிலை மனநிலைதாள் அடியார் இயல்பு என்று சொல்லிவிட்டு, தான் எழுதிய இலக்கியம் முழுவதிலும் அந்த அறத்தையும் கடைபிடித்திருக்கிறார் என்பதை அனைத்து நாயன்மார்களின் புராணங்களும் எடுத்துக் காட்டும். மேலும், புராணத்திற்குள் இடம்பெறும் அடியார்களின் மனநிலையும் அவ்வாறே இருந்தது. உதாரணமாக, சேரமான் பெருமாள் நாயனார் என்ற அரசர் யானையின் மீது வருகிறார். எதிரில் ஒரு வண்ணார் தலையில் உப்பு மண்ணைச் சுமந்து வருகிறார். வெயிலில் அந்த உப்பு மண் கரைந்து ஒழுகி, அந்த வண்ணாரின் உடம்பு முழுவதும் வெள்ளை நிறம் படிந்தது.

யானையின் மீதிருந்து பார்த்த அரசருக்கு, அது திருநீறு பூசியிருப்பதைப்போல் தெரிந்தது. உடனே, யானையை விட்டுக் கீழே இறங்கி வண்ணாரின் காலில் வீழ்ந்து வணங்கி, தன்னை `இந்த நாட்டின் அரசன்’ என்று அறிமுகம் செய்துகொள்ளாமல், `அடிச்சேரன்’ என்று பணிவாக அறிமுகம் செய்துகொள்கிறார். அப்போது வண்ணாகும் `அடி வண்ணான்’ என்று பணிகிறார். இதில் அரசனும் அழுக்குத் துணி வெழுத்து வன்ன மயமாக்கும் வண்ணாவும் ஒன்றாதல் காணலாம் இதுமட்டுமின்றி, யானையைவிட்டுக் கீழே இறங்கி வந்த அரசனுக்கு, வண்ணார் பூசியிருந்தது திருநீறு அல்ல; உவர்மண் என்று தெரிந்தது.

உடனே, நாம் ஏமாந்து விட்டோமே என்று நினைக்காமல், இது உவர் மண்ணாக இருந்தாலும் திருநீற்றை நினைவுபடுத்தியது என்று “திருநீற்றின் வாரா திருவேடம் நினைப்பித்தீர்” என வண்ணாரை வணங்கினார் வணங்காமுடி கொண்ட அரசர் எனில், உவர் மண்ணைக் கூட திருநீறாகப் பாவித்து, அனைத்தையும் சமமாகப் பாவித்த அடியார்கள் மனநிலை அடையாளப்படுத்தப்படுகிறது.

அதனால்தான், மாபெரும் இலக்கியமாகிய பெரியபுராணத்தை தெய்வச்சேக்கிழார் எழுதி முடித்ததும், அநபாயச் சோழன், தன்னுடைய அமைச்சருக்கு தான் மரியாதை செய்வதா? என்று கருதாமல் சேக்கிழாரை யானையின்மீது அமர்த்தி, மன்னர் அவsருக்குப் பின்புறம் அமர்ந்து வெண்சாமரம் வீசி வீதிவலம் வரச்செய்தார். ஆக, சகலமும் சமம்; சகலரும் சமம், அடியார்களுக்குள் வேறுபாடே இல்லை என்பது பெரிய புராணத்தின் அடி நாதம் எனலாம்.

பெரியபுராணத்தின் அடிநாதம் என்பதைவிட, அது சேக்கிழாரின் அடிநாதம் எனலாம். எவ்வாறெனில், திருத்தொண்டத் தொகையைத் தழுவியே இலக்கியம் செய்திருந்தாலும் திருத்தொண்டத் தொகையில் இடம்பெறாத, மனுநீதிச் சோழனுடைய வரலாற்றை காப்பியத்தின் தொடக்கத்தில் வைத்தார் தெய்வச் சேக்கிழார். அவ்வரலாறு சகலமும் சமம் என்பதை அடிநாதமாகக் கொண்டது.

இளவரசன் தேரில் செல்லும் போது பசுக்கன்று ஒன்று விழுந்து இறந்துவிட, துயர்தாங்காத தாய்ப்பசு, ஆராய்ச்சி மணியை அடிக்கிறது. என்னவாயிற்று என்ற கருத்துடன் அமைச்சர்களைப் பார்க்கிறார் மனுநீதிச் சோழன். அப்போது அமைச்சர்கள் சொன்னதாக,

‘‘வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணிநெடுந் தேர்மேல் ஏறி,
அளவுஇல் தேர்த்தானை சூழ அரசுஉலாந் தெருவில் போங்கால்
இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்தது ஆகத்
தளர்வு உறும் இத்தாய் வந்து விளைத்தது இத் தன்மை என்றான்’’

என்ற பாடலைச் சொல்கிறார் தெய்வச் சேக்கிழார்.

இந்த ஒரு பாடலுக்கு பல லட்சங்கள் பரிசாகத் தர வேண்டும் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். `வளவ’ என்றால் வளம்பொருந்திய நாட்டை உடையவனே! என்று பொருள். நம் நாட்டில் பல பசுக்கன்றுகள் இருக்கின்றன. இந்த ஒரு பசு இறந்தால் என்ன தவறு; `நின் புதல்வன்’ என்று குறிப்பிடுகிறார். பிள்ளைகள் பலர் இருந்திருந்தால் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் புதல்வன் என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பதால் ஒரே புதல்வன்தான் இருக்கின்றான் என்பது பொருள். `மணிநெடுந்தேர்’ என்றால் ஒலிக்கின்ற மணிகளையுடைய உயர்வான தேர். ஆகவே மணி ஒலித்துக்கொண்டே தேர் சென்றுள்ளது.

அதுவும் மிக உயர்வான தேர் என்பதால் கீழே நடப்பது தெரியாது. `தானைசூழ’ என்றால் படைகளும் உடன் சென்றுள்ளனர். படைகள் உடன் சென்றிருப்பதால் படைவீரர்கள்தான் பசுக்கன்றுறைத் தடுத்திருக்க வேண்டும். `அரசுலாந் தெரு’ என்றால் அரசர்கள் மட்டுமே போகக்கூடிய வழி. எனவே, அதில் பசுக்கன்று சென்றதுதான் தவறு. `இளைய ஆன்கன்று’ என்பதால் இளங்கன்று பயமறியாது. `இடைப்புகுந்து’ என்றால் இருபக்கச் சக்கரங்களுக்கு இடையே, தானாக வந்து புகுந்தது. மாறாக, இளவரசன் விபத்து நிகழ்த்த வில்லை என்ற விரிந்த பொருளில் பாடலை அமைத்தார் தெய்வச் சேக்கிழார்.

இத்தனை விரிவாக இளவரசன் மீது தவறில்லை என்று சொன்ன பிறகும், என்மகன் என்பதால் நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்; என்று சொல்லி தானே தேரோட்டிச் சென்று, தன் மகனைக் கொன்றார் மனுநீதிச் சோழர். அவருக்கு `இளவரசன் வேறு; இளம் பசுக்கன்று வேறு’ என்ற எண்ணம் இல்லை. சகலமும் சமம் என்பது சோழரின் மனநிலை. ஆகவே இந்த மனுநீதிச் சோழரின் வரலாற்றை, திருத்தொண்டத் தொகையில் இல்லாதபோதும் எடுத்துக் காட்டினார் தெய்வச் சேக்கிழார். ஆகவே, சேக்கிழாருக்கு எண்ணம், சொல், செயல் எல்லாம் ஒன்றில்தான். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்” என்பது அவரது வாக்கு மட்டுமன்று; வாழ்க்கையும் ஆகும்.

தொகுப்பு: முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post சேக்கிழாரின் தனித்துவம் appeared first on Dinakaran.

Related Stories: