பெரும்புதூரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

பெரும்புதூர், மே 24: பெரும்புதூர் மணிகூண்டு அருகே சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள், உணவகங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்புதூர் பஜாரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பெரும்புதூர் பஜார், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பல ஆண்டுகளாக சாலையோரம் பழக்கடை, பேக்கரி, உணவகங்கள், பல்பொருள் அங்காடி என ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தன. தற்போது, பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டு கடைகள் கட்டபட்டுள்ளதால், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர்.

இதனால், சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்பு கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், கடையின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடையின் உரிமையாளர்கள், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பெரும்புதூர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நீண்டநேர சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பெரும்புதூரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: