திருமயம் அருகே கொப்புடையம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

 

திருமயம். மே 24: திருமயம் அருகே அம்மன் கோயில் வைகாசி திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில் கொப்புடையம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நேற்று பூச்சொரிதல் விழா உடன் தொடங்கியது. விழாவையொட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் பூத்தட்டு ஏந்தி மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூ தட்டு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனிடையே எதிர்வரும் நாட்களில் நடைபெறும் பல்வேறு மண்டகப் படிகாரர்களின் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள், திருவீதி உலா, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, அடுத்த மாதம் 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 6ம் தேதி உதிரி வாய் துடைத்தல் என்னும் காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

The post திருமயம் அருகே கொப்புடையம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.

Related Stories: