அதிமுக ஆட்சியில் தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணி ஒரு மழைக்கே இடிந்து விழுந்த பாளை மைதான மேற்கூரை

நெல்லை: அதிமுக ஆட்சியில் தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணியால் ஒரு மழைக்கே இடிந்து பாளையங்கோட்டை மைதானம் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. பணிகளும் தரமற்ற முறையில் நடந்து உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு சாட்சியாக அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பாளை மைதானம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஒரு மழைக்கே இடிந்து விழுந்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளையங்கோட்டையில் பாரம்பரியமிக்க வஉசி மைதானத்தை பார்வையாளர்களை கவரும் வகையில் மாற்றி அமைக்க அதிமுக ஆட்சியில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டது. இதையொட்டி கடந்த 2021 பிப்ரவரி 25ம் தேதி பாளை வஉசி மைதானம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. அங்கு நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்தன.

ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்குள்ள காலரிகள் மாற்றியமைக்கப்பட்டதோடு, மைதானத்தின் நடைபயிற்சிக்கும் புதிய வசதிகள் செய்து தரப்பட்டன. நவீன இருக்கைகள், மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. இந்த கேலரிகளில் அதிகபட்சமாக 1750 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வசதிகளும் செய்து தரப்பட்டன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 320 அடியில் பிரமாண்ட மேடை, இரவிலும் போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கும் வகையில் 6 உயர் மின் கோபுர விளக்குகள், மைதானத்தில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. கடந்தாண்டு செப்டம்பரில் இம்மைதானம் திறக்கப்பட்டது. மைதானம் திறக்கப்படும் முன்பேர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து பல்வேறு முறைகேடுகள், விமர்சனங்கள் எழுந்தன. மைதானத்தை புனரமைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதிலும் குறிப்பாக முன்பு காங்கிரீட் இருக்கைகள் பலமுள்ளதாக காணப்பட்டன.

மைதானத்தின் மேற்கூரையோ தகடு போல் காட்சியளித்தது. காற்று காலங்களில் விசிறி போல் மேற்கூரை ஆடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நெல்லை மாநகரில் நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையில் வஉசி மைதானத்தின் இரு பகுதியில் மேற்கூரை காங்கிரீட் தூணோடு பெயர்ந்து இடிந்து விழுந்தது. சிமென்ட் சிலாப்புகளும் பெயர்ந்து விழுந்தன. பிற்பகல் என்பதால் மைதானத்தில் யாரும் சென்று அமரவில்லை. இதனால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் பாளை வஉசி மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் நடந்த பணிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற ஒன்றிய அரசு வக்கீல் குற்றாலநாதன் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அதிமுக ஆட்சியில் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பாளை வஉசி மைதானம் புதுப்பிப்பு பணிகள் தொடங்கியபோது, அதில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நெல்லை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். இந்நிலையில் தற்போது அது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வஉசி மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். இனிமேலாவது நெல்லை மாநகரில் நடந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ள முன்வரவேண்டும்’’ என்றார்.

The post அதிமுக ஆட்சியில் தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணி ஒரு மழைக்கே இடிந்து விழுந்த பாளை மைதான மேற்கூரை appeared first on Dinakaran.

Related Stories: