மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 41 மாணவிகள் பாலியல் புகார் துணை பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை: 41 மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து, மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு கடந்த 20ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் மீது பிஎஸ்சி மயக்கவியல் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் பட்டப்படிப்பு துறை மாணவிகள் 41 பேர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் செய்தனர். ஆபாசமாக பேசுவது, தவறான எண்ணத்தில் தகாத இடங்களில் தொடுதல் என தொடர்ந்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அழுதபடி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி தலைமையிலான விசாகா கமிட்டி குழுவினர் விசாரணை நடத்தினர். 18 மாணவிகள், ஒரு செவிலியர், 2 முதுநிலை மாணவிகள், ஒரு டாக்டர் என நேரில் கடந்த 10ம் தேதி ஆஜராகினர். விசாரணை 2 நாட்கள் நடந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மை அடிப்படையில் டாக்டர் சையது தாகிர் உசேனை சஸ்பெண்ட் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய விசாரணைக்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கூறுகையில், ‘‘ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜரிக்கு முன்பாக யாரும் இல்லாத நேரத்தில் மாணவிகளிடம் டாக்டர் சையது தாகிர் உசேன் தவறான எண்ணத்தில் தகாத இடங்களில் தொட்டு பேசுவார். முகக்கவசம் அணியகூடாது என கட்டாயப்படுத்துவார். மேலும் ஆபாசமாக பட்டப் பெயர்களை வைத்து அழைப்பார். இதுகுறித்து பலமுறை நாங்கள் எச்சரித்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது நீடிக்க கூடாது என்றே அச்சம், பதற்றம் இருந்தாலும் டீனை நேரில் சந்தித்து கண்ணீருடன் எங்கள் புகார் மனுக்களை கொடுத்தோம். எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்காததை சாதகமாக எடுத்துக் கொண்டு டாக்டர் சையது மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்’’ என்றனர்.

The post மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 41 மாணவிகள் பாலியல் புகார் துணை பேராசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: