60 யானைகள் கண்டறியப்பட்டன

 

உடுமலை மே 22: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, நரி, காட்டுப்பன்றி, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் வனத்துறையினர் புலிகள் கணக்கெடுப்பு மற்றும் யானைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17ம் தேதி வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து யானைகள் கணக்கெடுப்பு பணியை துவக்கினர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி, வந்தரவு மற்றும் கொழுமம் வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 881 ஹெக்டேர் பரப்பிலான வனப்பகுதியை 53 சுற்றுக்களாக பிரித்து வனவர், வனச்சரகர், வேட்டைத்தடுப்பு காவலர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழுக்கள் கணக்கெடுப்பு பணியை துவக்கினர்.

காலடித்தடம், சாணம் ஆகியவற்றை கொண்டும், நீர் அருந்த வரும் குளம், குட்டை, அணைப்பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணித்து யானைகளை கணக்கெடுத்தனர். குறிப்பாக யானைகள் குட்டிகளுடன் வலம் வரக்கூடிய ஜல்லிப்பட்டி, முத்துப்பாறை, கொட்டையாறு, ஆட்டுமலை, அமராவதி அணை, காமனூத்துப்பள்ளம், முடிமலை, வள்ளியம்மன் ஓடை, தளிஞ்சி, கூட்டாறு ஆகிய பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் உடுமலை வனச்சரக பகுதிகளில் அதிகளவு யானைகள் தென்பட்டன. மூன்று நாட்கள் நடந்த கணக்கெடுப்பில் மொத்தம் 60 யானைகள் உள்ளதாக வனத்துறையினர் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

The post 60 யானைகள் கண்டறியப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: