வைகாசி பட்டம் துவக்கம்: விவசாயிகள் உற்சாகம்

 

பல்லடம், மே 22: வைகாசி பட்டம் துவங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் கோடை வெப்பம் குறைந்து விடும். இது பயிர் சாகுபடிக்கு மிகவும் சாதகமாக அமையும். வைகாசி பட்டத்தில் பரவலாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சாகுபடி பரப்பு குறையும். எனவே இந்த சீசனில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஓராண்டு பயிர்களான மஞ்சள், மரவள்ளி, சேனைக்கிழங்கு போன்றவை சாகுபடி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.இது குறித்து பல்லடம் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது: வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை நீண்ட நாட்கள் இருப்பு வைக்கலாம்.

வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவற்றை விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும். தற்போது பார் எடுத்தல் பாத்தி கட்டுதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. கோடை வெயில் முடிந்ததும் நடவுப் பணிகளை துவக்க தயாராகி வருகிறோம். அடுத்த வாரத்தில் இருந்து சாகுபடி பணிகள் வேகம் எடுக்கும். மஞ்சள், சேனைக் கிழங்கு, வைகாசி பட்டத்தில் தான் சாகுபடி செய்ய முடியும்.வெயில், மழை என இயற்கை சீற்றங்களும் குறைவாகவே இருக்கும். இதனால் வைகாசி பட்டம் ஏமாற்றம் தராது இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வைகாசி பட்டம் துவக்கம்: விவசாயிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: