தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை மூச்சுதிணறி பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புத்துறைபாளையம், குட்டக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (28). இவரது மனைவி தேன்மொழி (25). இத்தம்பதி முத்தூர் அருகே ராம்நகரில் 2 மகள்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இவர்களது ஒன்றரை வயது இளைய மகள் தர்ஷ்மிதா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து தாய் தேன்மொழி அப்பகுதியில் சென்று பார்த்தபோது தர்ஷ்மிதா அங்கு இல்லை. அக்கம் பக்கத்தில் அவர் தேடினார். அப்போது எதிர் வீட்டு குளியலறையில் தண்ணீருடன் இருந்த வாளியில் தர்ஷ்மிதா தலைகீழாக விழுந்து கிடந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தர்ஷ்மிதாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை வாளியில் இருந்த தண்ணீருக்குள் கை விட்டு விளையாடிய போது அதற்குள் விழுந்து மூச்சுத் திணறி இறந்திருக்கலாம், குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லை, என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

The post தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை மூச்சுதிணறி பலி appeared first on Dinakaran.

Related Stories: