காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜிநகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை ஏடிஎஸ்பி அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஹாஜிநகர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிலால் என்பவரின் வீட்டில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அவற்றை மொத்தமாக சேர்த்து வெளிமாநிலங்களுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (37), இடைத்தரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
The post காஞ்சிபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.