கீழ்பாக்கத்தில் இளைஞர் கொலை: 3 பேரை கைது செய்து விசாரணை

பெரம்பூர்: சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணா என்கின்ற கருணாகரன் (26). இவர் மீது தலைமைச் செயலக காலனி, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டுக்கு செல்வதற்காக கீழ்ப்பாக்கம் சன்னியாசிபுரம் மெயின்ரோடு வழியாக வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் கருணாகரனை சரமாரியாக தாக்கியதுடன் அவரது தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், ‘’கருணாகரன் தனது நண்பர்கள் தினகரன், அவினாஷ், ராஜேஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த யோவான் என்பவரை முன்விரோதம் காரணமாக கடந்தாண்டு நவம்பர் மாதம் வெட்டியுள்ளார். இதில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த முன் விரோதம் காரணமாக நேற்று கருணாகரன் வீட்டுக்கு செல்லும்போது யோவான் உள்ளிட்ட அவரது நண்பர்கள் சேர்ந்து கருணாகரனை கொலை செய்துள்ளனர்’ என்று தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் (22), கீழ்பாக்கம் லக்மா நகர் பகுதியை சேர்ந்த வசந்த் (25), அர்ஜுன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான யோவான் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

The post கீழ்பாக்கத்தில் இளைஞர் கொலை: 3 பேரை கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: