யூடியூப் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் காய்கறி சந்தைக்கு நேற்று வந்த வாடிக்கையாளர் ஒருவர் காய்கறி வாங்கிக்கொண்டு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இந்த நோட்டை வாங்கிய வியாபாரி, அதை சோதித்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதனால் 200 ரூபாய் நோட்டு கொடுத்தவரை பிடித்து பலமனேர் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சித்தூர் மாவட்டம் கொத்தூரு கிராமத்தைச் சேர்ந்த கோபால்(41) என்பதும். இவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதும் தெரியவந்தது.

ெதாடர்ந்து நடத்திய விசாரணையில், கோபால் தனது ஊரில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். ஆனால் டீக்கடையில் போதிய வருமானம் கிடைக்கவில்லையாம். இதனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவுக்கு சென்று அங்கு புத்தகம், அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் அச்சகத்தில் வேலை செய்துள்ளார். ஆனால் அங்கும் போதிய வருமானம் கிடைக்காததால் கோபால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பு ‘யூ டியூப்பில்’ கள்ள நோட்டுகள் அச்சடிப்பது எப்படி என்பது குறித்து பார்த்து கூடுதல் தகவல்களை சேகரித்துள்ளார்.

இதையடுத்து கலர் பிரிண்டர் வாங்கியுள்ளார். அதன்மூலம் வீட்டில் 500 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகளாக அச்சடித்தார். அந்த கள்ள நோட்டுகளில் உள்ள செக்யூரிட்டி குறியீடுக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசி, அசல் நோட்டுகள் போல் மாற்றினார்.

இந்த ரூபாய் நோட்டை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பலமனேர் கங்கை அம்மன் தெருவில் உள்ள காய்கறி கடையில் கொடுத்து ரூ.50க்கு காய்கறி வாங்கியுள்ளார். அப்போது அந்த கடைக்காரருக்கு இது கள்ள ரூபாய் நோட்டு என தெரியவில்லை என்பதை அறிந்த கோபால், வீட்டில் ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகளை ஏராளமான அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார். ஆனால் நேற்று பலமனேர் காய்கறி சந்தையில் ரூ.200 கள்ள நோட்டைக்கொடுத்து காய்கறி வாங்கியபோது வியாபாரியிடம் பிடிபட்டுள்ளார் என தெரியவந்தது.

இதனையடுத்து கோபால் வீட்டில் இருந்த ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுகள் மற்றும் கலர் பிரிண்டர், கத்தரிக்கோல், நெயில் பாலிஷ், பேப்பர்கள், மை பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post யூடியூப் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: