கீழமணக்குடியில் ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கிய கும்பலை கைது செய்ய வேண்டும் பொது வினியோக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில், மே21 : கீழமணக்குடியில் ரேஷன் கடையில் இருந்த பெண் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் குமரி செல்வன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது : குமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தில், மீனவர் கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படும் செண்பகராமன் புத்தன்துறை மீனவ கூட்டுறவு சங்க நியாய விலை கடை உள்ளது. இங்கு மினிலா ஜோஸ் (44) என்பவர் விற்பனையாளராக உள்ளார். கடந்த 19ம் தேதி இவர் பணியில் இருந்த போது, கீழமணக்குடி ஊரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் இவரை தாக்கி, கடைக்குள் இருந்து வெளியே இழுத்து போட்டு கடையை பூட்டி விட்டும் சென்றுள்ளனர். இது தொடர்பாக, தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் மனு ரசீது மட்டும் பதிவு செய்துள்ளனர். இதுவரை வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வில்லை.

நேற்று காலை 9 மணிக்கு விசாரணைக்காக கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு வருமாறு மினிலா ஜோசை அழைத்துள்ளனர். இதற்காக அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். 1 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள், எஸ்.ஐ. யாரும் இல்லை, எனவே இங்கு இருக்கக்கூடாது என்று விரட்டி விட்டுள்ளனர். இதையடுத்து மினிலா ஜோஸ் அங்கிருந்து சென்றுள்ளார். மினிலா ஜோசை தாக்கிய யாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலில் புகாரை வாங்க மறுத்த தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னையில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கிய 20க்கு மேற்பட்ட நபர்கள் மீது அரசு வேலையை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன், மக்கள் பணி செய்யும் அரசு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் இரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேசி குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளை மூடி பொது வினியோக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

The post கீழமணக்குடியில் ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கிய கும்பலை கைது செய்ய வேண்டும் பொது வினியோக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: