சோழவரம் அருகே பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு

புழல், மே 20: சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட பள்ள சூரப்பட்டு கிராமத்தில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட பள்ள சூரப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு, டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் அருகில் உள்ள முட்புதரில் பிறந்த சில நாட்களான குழந்தை இறந்த நிலையில் இருந்ததை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் பார்த்துள்ளனர். எனவே, இது குறித்து, சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், செங்குன்றம் உதவி கமிஷனர் கனியன், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வழக்கு பதிவு செய்து கிராம பொது மக்களிடமும் ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் அந்த பகுதி வார்டு உறுப்பினர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இதன் அருகே உள்ள பூதூர் மற்றும் பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று விசாரித்து வருகின்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணிகள் யாராவது செக்கப் வந்தார்களா, அவர்களின் தவறான முறையில் இந்த குழந்தை பிறந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இந்த கிராமத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சோழவரம் அருகே பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: