சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில் பாஜகவின் பெயர் 28 முறை விமர்சனம்: இந்திய வெளியுறவு துறை கண்டனம்

புதுடெல்லி: சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில், பாஜகவின் பெயர் 28 முறை விமர்சனம் செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவு துறை கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமை குறித்து விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா, இந்தியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், மதம் சார்ந்த சமூக உறுப்பினர்களை பகிரங்கமாக குறிவைக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பற்றிய அறிக்கையில், ‘ஆளும் கட்சியான பாஜகவின் பெயரை 28 முறை குறிப்பிட்டு, மத சுதந்திரம், வெறுப்பு பேச்சுகள், பிளவுபடுத்தும் வார்த்தைகள் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையை பார்த்தோம். இதுபோன்ற அறிக்கைகள் தவறான தகவல்களையும், புரிதல்களையும் அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இந்த அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவுடனான கூட்டாண்மையை மதிக்கிறோம். அதேநேரம் இதுபோன்ற அறிக்கைகள் உள்நோக்கம் மற்றும் பாரபட்சத்துடன் வெளியிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

The post சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில் பாஜகவின் பெயர் 28 முறை விமர்சனம்: இந்திய வெளியுறவு துறை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: