புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன் பறிமுதல்

புழல்: புழல் மத்திய சிறையில் நேற்றிரவு தண்டனை பிரிவில் இருக்கும் கைதிகளிடம் சிறைக் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், 2 கைதிகள் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள தண்டனை பிரிவில் சுமார் 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த பிளாக்குகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதைபொருள் மற்றும் செல்போன் நடமாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி இரவு நேரங்களில் அதிரடி சோதனை நடத்தி செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும், பிடிபடும் குற்றவாளிகள்மீது சிறைத்துறை சார்பில் புகார் தெரிவித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், அவர்கள் மீதான விசாரணை மந்தகதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புழல் மத்திய சிறையில் உள்ள தண்டனை பிரிவில் நேற்றிரவு சிறைக் காவலர்கள் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு பிளாக்கில் 2 கைதிகள் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சிறை கண்காணிப்பாளர் விரைந்து வந்து, பிடிபட்ட 2 கைதிகளிடம் தீவிரமாக விசாரித்தார்.

விசாரணையில், அவர்களில் ஒருவர், சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த கார்த்திக், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு முதல் 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகத் தெரியவந்தது. மேலும் மற்றொருவர், சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 5வது தெருவை சேர்ந்த குரங்கு சையத் (எ) சையது இப்ராகிம் என்பதும், இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தண்டனை பிரிவின் கழிவறை சுற்றுச்சுவர் அருகே மண்ணில் புதைத்து வைத்திருந்த மற்றொரு செல்போன், பேட்டரி, சார்ஜரையும் சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புழல் போலீசில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புழல் மத்திய சிறையில் பல்வேறு கண்காணிப்புகளை தாண்டி, சிறை கைதிகளுக்கு செல்போன், சார்ஜர், பேட்டரி மற்றும் கஞ்சா போதைபொருட்களை யார் மறைத்து வைத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றனர் என அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: