தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வெளியீடு அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படுவதாக கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தி தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அதன் இணைய தளைத்தில் ஒரு பதிவேற்றம் செய்யப்பட்டு அதுகுறித்த கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு ஆகிய அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால் இந்திய தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரிக்கிறது. மேலும் அதுசார்ந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையின் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

The post தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வெளியீடு அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் appeared first on Dinakaran.

Related Stories: