59 ரன்னில் சுருண்டது ராஜஸ்தான் 112 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி: பந்துவீச்சில் பார்னெல் அமர்க்களம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 112 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். கோஹ்லி, டு பிளெஸ்ஸி இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 50 ரன் சேர்த்தது. கோஹ்லி 18 ரன் எடுத்து வெளியேற, டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் இணைந்து ராயல்ஸ் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தது. டு பிளெஸ்ஸி 55 ரன் (44 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆசிப் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த மகிபால் லோம்ரர் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடம் ஸம்பா சுழலில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த மேக்ஸ்வெல் 54 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சந்தீப் வேகத்தில் கிளீன் போல்டானார்.

கடைசி கட்டத்தில் அனுஜ் ராவத் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட… ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. பிரேஸ்வெல் 9 ரன், அனுஜ் ராவத் 29 ரன்னுடன் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆசிப், ஸம்பா தலா 2, சந்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், பட்லர் இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல் தலா 4 ரன், ஜோ ரூட் 10 ரன், துருவ் ஜுரெல் 1 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்ட, ராஜஸ்தான் 7 ஓவரில் 31 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

அஷ்வின் டக் அவுட்டானது (ரன் அவுட்) ராயல்சுக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசிய ஹெட்மயர் 19 பந்தில் 35 ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் பிரேஸ்வெல் வசம் பிடிபட்டார். ஆடம் ஸம்பா (2), கே.எம்.ஆசிப் (0) இருவரும் கர்ண் ஷர்மா பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் 10.3 ஓவரில் 59 ரன்னுக்கு சுருண்டு 112 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆர்சிபி பந்துவீச்சில் வேய்ன் பார்னெல் 3 ஓவரில் 10 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். பிரேஸ்வெல், கர்ண் ஷர்மா தலா 2, சிராஜ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபி அணி 12 போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்து (12 புள்ளி) பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது. ராஜஸ்தானுக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால், அந்த அணிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

The post 59 ரன்னில் சுருண்டது ராஜஸ்தான் 112 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி: பந்துவீச்சில் பார்னெல் அமர்க்களம் appeared first on Dinakaran.

Related Stories: