தூத்துக்குடி கள்ளவாண்டார் கோயில் திருவிழா பானையில் கொதிக்கும் சோற்றுக் கஞ்சியை வாரி தலையில் அடிக்கும் விசித்திர நிகழ்ச்சி

செய்துங்கநல்லூர்: தன்பொருநை நதியாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்துச் சம்பவங்கள் பல நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாயமானின் உருவம் கொண்டு வந்த மாரீசன் மறைந்த இடம், மாயமான்குறிச்சி என்றும், சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது, ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்ட இடம் ஜடாயு துறை என்றும், சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அனுமனின் தலைமையில் வானரப்படைகள் அணிவகுத்து நின்ற இடம் குரங்கணி என்றும் அழைக்கப்படுகின்றன.

அதேபோல் தன் மனைவியை வாலியிடம் இருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்ரிமலையில் இருந்த ராமரைச் சந்தித்து உதவி கேட்கிறான். சுக்ரீவனுக்கு உதவ நினைத்த ராமர், வாலியுடன் நேருக்குநேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், அவரை மறைந்திருந்து வதம் செய்தார். கீழே வீழ்ந்த வாலி, மறைந்திருந்து என்னை வீழ்த்திவிட்டாயே கள்ள ராமா, கள்ள ஆண்டவனே என்று கதறியபடியே உயிர் நீத்தான். கிஷ்கிந்தை காண்டத்தில் வரும் இந்த வாலி வதம், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள மணக்கரையில் நடந்ததாகச் கூறப்படுகிறது.

இதையொட்டி மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்டவர் சுவாமி கோயில் எழுப்பப்பட்டு உள்ளது. கள்ள ஆண்டவர் என்ற பெயரே மருவி, கள்ளவாண்டவர் என்று ஆனதாம். மணக்கரையில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலில் இருந்து பிடிமண் எடுத்துச் சென்று கட்டப்பட்ட கள்ளவாண்டார் கோயில்கள் வைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களான முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், பராசங்குநல்லூர், ராமன்குளம், கிளாக்குளம், பெருமனேரியில் அமைந்திருக்கின்றன. வாலி வதம் திறந்தவெளியில் நடைபெற்றதால், இந்த கள்ளவாண்டார் கோயில்கள் அனைத்தும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கின்றன.

அரசர்குளத்தில் உள்ள கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாத கடைசி செவ்வாய்கிழமை திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா அன்று காலை கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சுவாமி கள்ளவாண்டாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. அதிகாலை 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 36 பிரமாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சப்பட்டது. அப்போது நையாண்டி, உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை சொல்லப்பட்டது. இந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று தென்னம்பாளையை பானைக்குள் விட்டு சுடுகஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டனர். இந்நிகழ்ச்சி, வாலியை மறைந்திருந்து வீழ்த்திய காரணத்துக்காக, கொதிக்கும் கஞ்சியைத் தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத் தானே ராமர் தண்டனை கொடுத்துக் கொள்வதாக ஐதீகம். இதனை பக்தர்கள் திரளானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

The post தூத்துக்குடி கள்ளவாண்டார் கோயில் திருவிழா பானையில் கொதிக்கும் சோற்றுக் கஞ்சியை வாரி தலையில் அடிக்கும் விசித்திர நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: