திருவாரூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடிபணிகள் மும்முரம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெல் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு எனப்படும் செம்மை நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவு முறை என சம்பா மற்றும் தாளடி பயிராக 3 லட்சத்து 72 ஆயிரத்து 994 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதற்கு தேவையான உரங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டதுடன் தேவையான ரசாயண உரங்கள் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் போன்றவையும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அறுவடை முடிவுற்று மாவட்டத்தில் ஐந்தரை லட்சம் மெ.டன் அளவிற்கு சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக பச்சை பயறு மற்றும் பருத்தி பயிர் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் பச்சை பயறு மற்றும் உளுந்து பயிராக மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 112 ஏக்கரிலும் சாகுபடி நடைபெற்றது. அதன்பின் கோடை நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு, செம்மை நெல் சாகுபடி எனப்படும் இயந்திர நடவு மற்றும் சாதாரண நெல் நடவு என மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் வரும் ஆண்டிற்கான குறுவை சாகுபடியாக ஒன்றரை லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி விதை நாற்றாங்கால் அமைப்பது, களை எடுப்பது மற்றும் டிராக்டர் கொண்டு ஏர் உழுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடிபணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: