நீதிமன்றத்துக்குள் யாரையும் கைது செய்யக்கூடாது: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்ட விதத்திற்கு தலைமை நீதிபதி கண்டனம்

இஸ்லாமாபாத்: நீதிமன்றத்தில் இருக்கும் யாரையும் கைது செய்யக்கூடாது என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்த அவரை நீதிமன்ற வளாகத்திலேயே பாகிஸ்தான் சிறப்பு படை அதிரடியாக கைது செய்து அழைத்து சென்றது.

இம்ரான் கான் கைதுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் சாலைகளில் வாகனங்கள், கார்கள் மற்றும் கண்ணில் படும் பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இம்ரான் கான் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, இம்ரான்கானை 8 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இம்ரான் கான் கைது சட்டவிரோதம் என அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இம்ரான் கைது சட்ட விரோதம் என்றும், ஒரு மணி நேரத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்றத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என கருத்து தெரிவித்த அந்நாட்டு தலைமை நீதிபதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளர். நீதிமன்ற உத்தரவை ஏற்று இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post நீதிமன்றத்துக்குள் யாரையும் கைது செய்யக்கூடாது: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்ட விதத்திற்கு தலைமை நீதிபதி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: