வ.உ.சி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டியாருக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாருக்கு கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் 40 லட்சம் ரூபாய் செலவிலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் 16 லட்சம் ரூபாய் செலவிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், கொங்கு மண்டலத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தியாகி ஈஸ்வரன் நினைவைப் போற்றும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் சேவைகளை நினைவுகூரும் வகையில், அன்னாருக்கு நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம், பவானி சாகர், முடுக்கன்துறையில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முன்னாள் முதலமைச்சர் சுப்பராயனுக்கு நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரம், நவணிதோட்டக்கூர்பட்டியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வ.உ.சி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டியாருக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: