டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் அதிரடி வீண்: ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது மும்பை

மும்பை, மே 10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. ஆர்சிபி தொடக்க வீரர்களாக கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். கோஹ்லி 1 ரன் மட்டுமே எடுத்து பெஹரண்டார்ப் பந்துவீச்சில் இஷான் கிஷன் வசம் பிடிபட, ஆர்சிபிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த அனுஜ் 6 ரன்னில் வெளியேற, ஆர்சிபி 2.2 ஓவரில் 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் இணைந்து அதிரடியில் இறங்க, ஆர்சிபி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

மேக்ஸ்வெல் 25 பந்தில் அரை சதம் விளாசி மிரட்டினார். மறு முனையில் டு பிளெஸ்ஸி 30 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்து மிரட்டியது. மேக்ஸ்வெல் 68 ரன் (33 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), லோம்ரர் 1 ரன், டு பிளெஸ்ஸி 65 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கார்த்திக் 18 பந்தில் 30 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. கேதார் ஜாதவ், ஹசரங்கா தலா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பெஹரண்டார்ப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 83 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். வதேரா 52 ரன்(34 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கிரீன் 2 ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹசரங்கா, விஜயகுமார் தலா 2 விக்கெட் விக்கெட் வீழ்த்தினர். மும்பை இந்தியன்ஸ் 11 போட்டியில் 6வது வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் இருந்து ஒரேயடியாக 3வது இடத்துக்கு முன்னேறியது.

The post டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் அதிரடி வீண்: ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது மும்பை appeared first on Dinakaran.

Related Stories: