வேலூர் அடுத்த வேலங்காட்டில் நடைபெறும் பொற்கொடியம்மன் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை

வேலூர் : வேலங்காடு பொற்கொடியம்மன் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அணைக்கட்டு வட்டார மக்கள் சார்பில் பாஜவினர் கோரிக்கை மனு அளித்தனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.

இதில் வேலூர் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவப்பிரகாசம் என்பவர் அளித்த மனுவில், ‘சில ஆண்டுகளுக்கு முன் கடன் பெற்று டிராக்டரை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தேன். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு தொழில் சரிவர இல்லாததால் அதனை கே.வி.குப்பத்தை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு விற்றேன். ஆனால் அதற்கான பணத்தை அவர் தராமல் இழுத்தடித்து வருகிறார். கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து டிராக்டர் அல்லது பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் மாவட்ட பாஜ ஆன்மீகம், கோயில் மேம்பாட்டு பிரிவு அணைக்கட்டு வட்டார மக்கள் சார்பில் அளித்த மனுவில், மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான வேலங்காடு பொற்கொடியம்மன் திருவிழா வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இத்திருவிழாவுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். எனவே, அத்திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

அணைக்கட்டு தாலுகா கருங்காலி ஊராட்சிக்குட்பட்ட சாமன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இறந்தவர்களை புதைப்பது, எரிப்பது என ஈமச்சடங்குகளை நடத்தி வருகிறோம். அரசு புறம்போக்கு என்று உள்ள அந்த இடத்தை சுடுகாடு என வகைப்படுத்தி ஈமச்சடங்கு செய்வதற்கான மேடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’ என்று கேட்டிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்எல் பிரிவினர் அளித்த மனுவில், ‘அரியூர் திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், அண்ணா நகர் பகுதிகளில் சர்வே எண் 108/6, 108/4 கொண்ட இடங்களில் 90 ஏழை எளிய மக்கள் 60 ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை வழங்க 6 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே, அவர்களுக்கு பட்டா விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், மனைப்பட்டா, சிட்டா அடங்கல், கல்விக்கடன், காவல்துறை பாதுகாப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும், பொதுப்பிரச்னைகள் தொடர்பாகவும் ஏராளமான மனுக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்டன.

முன்னதாக குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன், விஐடியில் நடைபெற உள்ள மெகா வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சர்வர் தகராறில் மக்கள் அவதி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களின் மனுக்களை பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சீட்டு வழங்கப்பட்டது. மனுக்களுடன் வரும் மக்கள் இங்கு தங்கள் மனுக்களை வழங்கி எண்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நேற்று சர்வர் வேலை செய்யாததால் ஒரு மணிநேரத்துக்கும் மேல் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

செறிவூட்டப்பட்ட அரிசியின் விழிப்புணர்வு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரிசி தொடர்பான ரேஷன் அரிசி பாக்கெட் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரிசியில் சமைத்த உணவினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

The post வேலூர் அடுத்த வேலங்காட்டில் நடைபெறும் பொற்கொடியம்மன் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: