பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94 சதவீதம் பேர் தேர்ச்சி: விருதுநகர் மாவட்டம் முதலிடம்; வழக்கம் போல் மாணவிகள் அசத்தினர்

சென்னை: பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் நேற்று வெளியிட்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.03. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியரே 4.93 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்டு மே 8ம் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

அதன்படி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை 10 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் 7800 பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியருக்கு கடந்த மார்ச் 13ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்தது. இந்த தேர்வில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 பேர் மணவியர், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 பேர் மாணவர்கள். மொத்த மாணவ, மாணவியரில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.03 சதவீதம்.

இதன்படி, 4,05,753 மாணவியர் தேர்ச்சி (96.38%) பெற்றுள்ளனர். 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி (91.45%) பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதி தேர்ச்சி (100%) பெற்றுள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியரே 4.93 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 மே மாதம் 8,06,277 பேர் பிளஸ்2 தேர்வு எழுதியதில் 7,55,998 பேர் தேர்ச்சி (93.76%) பெற்றனர். இந்த ஆண்டில் 94.03% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேனிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 7533 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதினர். அந்த பள்ளிகளில் 2767 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள் 326 அடங்கும்.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மணவர்கள் என்று பார்த்தால் 23,957 பேர். இந்த 2023 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என்று பார்த்தால் 32501 பேர். கடந்த ஆண்டைவிட 8544 பேர் கூடுதலாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதியதில், 3923 பேர் (89.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதியதில் 79 பேர் (87.78%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகளை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகள் 89.80%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.08%, இருபாலர் படிக்கும் பள்ளிகள் 94.39%, பெண்கள் பள்ளிகள் 96.04%, ஆண்கள் பள்ளிகள் 87.79% தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டங்களை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீத தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம் 96.45 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 95.90 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 95.43 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட்டவுடன் மாணவர்களின் செல்போன்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான பிறகு மாணவர்கள் குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் பெற்றோர் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனாலும் அவர்களுக்காக உடனடியாக துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து உயர்கல்விக்கு செல்லும் போது என்ன பாடங்களை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டுவதற்காக 3200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு குழுக்களை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது. கல்லூரி அல்லது வேறு எந்த படிப்பாக இருந்தாலும் அந்த குழுவிடம் நாடினால் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள். அதற்காகத்தான் நான் முதல்வன் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிக விவரங்கள் உள்ளன.

பிளஸ் 2 முடித்த பிறகு சில பயிற்சி மையங்கள் மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க பேனர்கள் வைப்பதாக புகாராக தெரிவிக்கிறார்கள். அவர்கள் பேனர் வைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு தலையிட முடியாது. தற்போது முடிவுகள் வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றுகள் 12ம் தேதி வழங்கப்படும். ஒரிஜினல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். தனியார் பள்ளிகளைப் போல தேர்ச்சி வீதம் அரசுப் பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றவர்களுக்கு ஏற்ற அடிப்படை வசதிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து கொடுக்கும். அதன் பேரில் தற்போது நடந்து வரும் விழிப்புணர்வு பேரணி மூலம் 70 ஆயிரம் மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

* முக்கிய பாடங்களில்
100% மதிப்பெண்கள்
பெற்ற மாணவர்கள்
பாடங்கள் எண்ணிக்கை
தமிழ் 2
ஆங்கிலம் 15
இயற்பியல் 812
வேதியியல் 3909
உயிரியல் 1494
கணக்கு 690
தாவரவியல் 340
விலங்கியல் 154
கணினி அறிவியல் 4618
வணிகவியல் 5678
கணக்குப்பதிவியல் 6573
பொருளியல் 1760
கணினி பயன்பாடுகள் 4051
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334

* பாடவாரியான தேர்ச்சி விவரம்
பாடம் தேர்ச்சி வீதம்(%)
இயற்பியல் 97.76
வேதியியல் 98.31
உயிரியல் 98.47
கணக்கு 98.88
தாவரவியல் 98.04
விலங்கியல் 97.77
வணிகவியல் 96.41
கணக்குப் பதிவியல் 96.06

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்: 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவு ஒரே நாளில் வெளியாகும்
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டு கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவு மாணவர்களின் செல்போனுக்கே மதிப்பெண்களுடன் தெரிவிக்கப்படும். அதை பார்க்கின்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் மதிப்பெண் ஏன் குறைந்துள்ளது என்று கேட்காமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதால், மாணவர்கள் அந்த தேர்வில் பங்கேற்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மதிப்பெண்ணை வைத்து குறைத்துப் பேசாமல் அவர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த தயாராக வேண்டும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை பொறுத்தவரையில் உயர்கல்வி செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 3200 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராம பகுதியோ அல்லது வேறு எந்த பகுதியாக இருந்தாலும் விவரம் அறியாதவர்கள் இருந்தால் அவர்கள் மேற்கண்ட குழுவிடம் சென்று உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பிளஸ்1 தேர்வு முடிவு 17ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு 19ம் தேதியும் வெளியிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த நிலையில், தற்போது இரண்டு தேர்வு முடிவுகளையும் 19ம் தேதியே வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

* அரசு பள்ளிகளில் 96.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் அரசுப்பள்ளிகளில் 96.45 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தாக பெரம்பலூர் மாவட்டம் 95.90 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல, விருதுநகர் மாவட்டம் 95.43 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

* சிறைவாசிகள் 79 பேர் தேர்ச்சி
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய சிறைவாசிகள் 90 பேரில் 79 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் தேர்ச்சியடைந்துள்ளார்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
விருதுநகர் 97.85%
திருப்பூர் 97.79%
பெரம்பலூர் 97.59%
கோவை 97.57%
தூத்துக்குடி 97.36%
சிவகங்கை 97.26%
ஈரோடு 96.98%
நாமக்கல் 96.94%
அரியலூர் 96.88%
நெல்லை 96.61%
ராமநாதபுரம் 96.30%
திருச்சி 96.02%
தென்காசி 95.96%
மதுரை 95.84%
தஞ்சை 95.22%
திண்டுக்கல் 93.77%
நீலகிரி 93.85%
தேனி 93.17%
புதுக்கோட்டை 92.81%
தருமபுரி 92.72%
செங்கல்பட்டு 92.52%
திருவள்ளூர் 92.47%
கடலூர் 92.04%
திருவாரூர் 91.46%
திருப்பத்தூர் 91.13%
கள்ளக்குறிச்சி 91.06%
காஞ்சிபுரம் 90.82%
நாகை 90.68%
விழுப்புரம் 90.66%
மயிலாடுதுறை 90.15%
திருவண்ணாமலை 89.80%
கிருஷ்ணகிரி 89.69%
வேலூர் 89.20%
ராணிப்பேட்டை 87.30%

* கணக்குபதிவியலில் 6,573 பேர் சென்டம்
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணக்குப்பதிவியலில் 6,573 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். இந்தாண்டு தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94 சதவீதம் பேர் தேர்ச்சி: விருதுநகர் மாவட்டம் முதலிடம்; வழக்கம் போல் மாணவிகள் அசத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: