செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி; சீரமைக்க கோரிக்கை

புழல்:செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில், குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையான ஜிஎன்டி சாலையில் தினமும், டூ வீலர், ஆட்டோ, கார், பேருந்து மற்றும் லாரி என, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள புழல், செங்குன்றம் பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அவ்வப்போது தற்காலிகமாக செம்மண் போட்டு தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

இதுபோன்று கடந்த முறை தற்காலிகமாக போடப்பட்ட செம்மண் சாலை, சமீபத்திய மழையில் கரைந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் தடுமாறியபடி கீழே விழுகின்றனர். மேலும் பைக், பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் பீதியில் பயணிக்கின்றனர். செங்குன்றம் ஜிஎன்டி சாலை பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. இப்பகுதிகளில் மின்விளக்குகளும் எரிவதில்லை. இதனால் விபத்துகளும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயிரிழப்பு போன்ற பெரிய அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

The post செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி; சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: