திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் முக்கிய குற்றவாளி அரியானாவில் சிக்கினார்: துப்பாக்கி முனையில் கைது, ரூ.15 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியை அரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி 12ம் தேதி அதிகாலை நான்கு ஏடிஎம் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. இந்த வழக்கில் அரியானா மாநிலத்துக்கு தப்பிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் இரண்டே நாளில் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கர்நாடகா, குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருந்தவர்கள் என இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.5 லட்சம், 3 கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அளித்த தகவலின்படி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நபர், அரியானாவில் பதுங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு முகாமிட்டு தேடினர்.

இந்நிலையில், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலம், நூ மேவாத் மாட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான ஆசீப் ஜாவேத்தை(30) , ராஜஸ்தான் எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில், ஒரு பாழடைந்த பங்களாவில் பதுங்கியிருந்தபோது, தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், வேன் மூலம் நேற்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணைக்குப்பின் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் முக்கிய குற்றவாளி அரியானாவில் சிக்கினார்: துப்பாக்கி முனையில் கைது, ரூ.15 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: